×

அனுமதியற்ற பாரில் ரகளை வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது : ஒருவருக்கு வலை

கரூர், அக்.16:  கரூர் அருகே அனுமதியின்றி நடத்திய பாரில் ஏற்பட்ட பயங்கர ரகளையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் அருகே உள்ள ஆத்தூர் பிரிவு சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது. நெடுஞ்சாலைகளில் உள்ள பார்கள் அகற்றப்பட்டபோது இங்கிருந்த அரசு மதுக்கடை மற்றும் பார் அகற்றப்பட்டது. எனினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்யும் பார் நடத்தப்பட்டு வந்தது. இக்கடையை குளித்தலை ஐநூற்றுமங்கலம் பாலமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். இவரது அண்ணன் சிவா (28) தம்பிக்கு துணையாக கடையில் இருந்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் மதுகுடித்தபோது கடையில் மயங்கி கிடந்த ஒருவரை தண்ணீர் ஊற்றி சிவா அங்கிருந்து கிளம்ப சொன்னதாக தெரிகிறது. இதனை சக குடிமகன்கள் கண்டித்தனர். இதனால் நேற்று காலை கடைக்கு சிலர் வந்து இந்த சம்பவம் குறித்து தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்கும் கடைநடத்துவோருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது கடை இங்கு இருக்கக்கூடாது மாற்றவேண்டும் என கோரிவரும் சிலரும் இதில் கலந்து கொண்டனர். சிமென்ட் டேபிள்களை அவர்கள் உடைத்து, கடையின் ஜன்னலையும் பிடித்து இழுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா பெரிய அரிவாளை எடுத்து வந்து வீசினார். இதில் புன்னம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(35) என்பவருக்கு தலையில் வெட்டு விழுந்ததது. இதுபற்றி அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசைக்கண்டதும் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இதில் 6 பேரைகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓருவரை தேடி வருகின்றனர். காயம் அடைந்த பழனிச்சாமி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : boys ,bar ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு