×

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 63% நிறைவு

ஈரோடு, அக். 16:  ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 63 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் கூறினார். ஈரோடு மாநகராட்சிக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலமாக மாநகராட்சி பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.  அங்கு குடிநீரை சேமித்து வழங்குவதற்காக புதியதாக 21 மேல்நிலை தொட்டிகளும், 46 பழைய மேல்நிலை தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஈரோடு அருகே தொட்டம்பட்டியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:  ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் 21 இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின்படி ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது.   ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் 80ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இந்த குடிநீர் இணைப்புகள் 1.30 லட்ச இணைப்புகளாக அதிகரிக்கப்படுகிறது. இதுவரை 5 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் இதுவரை 63 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் ஈரோடு மாநகர பகுதிகளில் காளைமாட்டுசிலை, கே.கே.நகர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம் ஆகிய 4 இடங்களில் ரயில்வே துறையிடம் அனுமதி பெற வேண்டியது உள்ளது. இந்த திட்டத்தில் ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ.9க்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மகேஸ்வரன் கூறினார்.   இந்த ஆய்வின் போது நிர்வாக பொறியாளர்கள் தங்கவேல், செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சிவக்குமார், பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : 63% ,Panchayat ,
× RELATED திருவையாறு அருகே பைக்கில் கொண்டு வந்த ரூ.63 ஆயிரம் பறிமுதல்