வாக்காளர் பட்டியலில் திருத்தம் 48,273 பேர் விண்ணப்பம்

ஈரோடு, அக். 16:  ஈரோடு மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் முகாம்களில் 48 ஆயிரத்து 273 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்.1ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வாக்குச்சாவடிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

   மாவட்டத்தில் 912 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்களில் இதற்கான முகாம்கள் நடந்தன. வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் செய்து கொள்ள இதுவரை 4 முகாம்கள் நடந்தது. இந்த 4 முகாம்களில் பொதுமக்கள் சுருக்க திருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 ஆயிரத்து 662 பேரும், ஈரோடு மேற்கு தொகுதியில் 6 ஆயிரத்து 232 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 5 ஆயிரத்து 915 பேரும், பெருந்துறை தொகுதியில் 6 ஆயிரத்து 727 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பவானி தொகுதியில் 6 ஆயிரத்து 192 பேரும், அந்தியூர் தொகுதியில் 5 ஆயிரத்து 527 பேரும், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 7 ஆயிரத்து 605 பேரும், பவானிசாகர் தொகுதியில் 5 ஆயிரத்து 413 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.   இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 48 ஆயிரத்து 273 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் தொடர்பாக திருத்தங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: