வெண்டிபாளையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறப்பு

ஈரோடு, அக். 16:   ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று கடை திறப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் டிஎஸ்பி., ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நீங்கள் கலெக்டரிடம் மனு அளியுங்கள். தற்போது முற்றுகையிடாதீர்கள் என்றார்.

 பொதுமக்கள் கூறியதாவது:  நாங்கள் இந்த டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என 3 முறை கலெக்டரிடம் மனு அளித்து கடை திறப்பதை தடுத்து நிறுத்தியுள்ளோம். ஆனால் இப்போது மீண்டும் கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது, என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடை முன் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 10 பெண்கள் உட்பட 35பேரை கைது செய்து மொடக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதையடுத்து கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரியும், போலீசாரை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மேலும் 20 பெண்கள் உட்பட 45 பேரை கைது செய்தனர். இந்த இரண்டு போராட்டத்திலும் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு போராட்டம் ஒரு புறம் இருக்க, புதிதாக திறக்கப்பட்ட கடைக்கு மதுபான விற்பனைக்காக மதுபான லோடு வந்தது. இதை போலீசார் பாதுகாப்பில் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது. இன்று (16ம் தேதி) முதல் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: