படியில் பயணிக்கும் அவலம் விழுப்புரம் - பில்லூருக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

விழுப்புரம், அக். 16:  விழுப்புரத்திலிருந்து பில்லூருக்கு கூடுதல் பேருந்து இயக்கக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ஊராட்சி பொதுமக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரத்திலிருந்து பாணாம்பட்டு, ஆனாங்கூர் வழியாக பில்லூருக்கு அரசு பேருந்துகள் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. தினசரி பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவர்கள் என பலர் செல்வதால் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு வரும் அரசு பேருந்தில் தினசரி படிகட்டில்தான் மாணவர்கள் பயணித்து வரும் அவலநிலை உள்ளது. மேலும் வேலைக்குச் செல்பவர்களும் கூட்ட நெரிசலில் பயணிக்கின்றனர். காலை நேரத்தில் இந்த ஒரு பேருந்தை தவிர வேறு பேருந்து இல்லாததால் அனைவரும் போட்டி, போட்டுக்கொண்டு இந்த பேருந்தில் சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலால் பலர் பேருந்தை விட்டு நடந்தே செல்லும் நிலையும் உள்ளது.

இந்த நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி கிராம மக்கள் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் படியில், ஜன்னலில் தொங்கியபடி பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

 எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து காலை நேரங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். அதேபோல் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் விடும்போது ஒரு டிரிப் பேருந்து இயக்கினால் பொதுமக்கள், மாணவர்கள் எளிதாக செல்ல முடியும். ஆட்சியர் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டு பேருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்விரோத தகராறில் மோதல்

Related Stories: