×

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் கம்பத்தில் திறப்பு

கம்பம், அக். 16: நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க கோரிக்கையை ஏற்று கம்பத்தில் ேநரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் கோட்டாட்சியர் வைத்தியநாதன் நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். தேனிமாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் முதல் போக பாசனத்திற்காக ஜூன் 17ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடவுசெய்யப்பட்ட முதல் போக சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கம்பம், சாமாண்டிபுரம், சாமண்டியம்மன் கோயில் பகுதியில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கியுள்ளது.

அறுவடை செய்த நெல்மூடைகளை வீடுகளில் சேகரித்துவைக்க இடவசதியில்லாத விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், உடனடியாக பணப்பட்டுவாடா கிடைக்கவும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்க்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், நேற்று முதல் கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை உத்தமபாளையம் கோட்டாட்சியர் டாக்டர் வைத்தியநாதன் திறந்து வைத்தார்.

இதுகுறித்து கோட்டாட்சியர் கூறுகையில், ` பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் விவசாயிகளிடமிருந்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1770 மற்றும் ஊக்கத்தொகை ரூ. 70 என ரூ. 1840ம், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1730 மற்றும் ஊக்கத்தொகை ரூ. 70 என ரூ.1800ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை முழுவதும் நேரடியாக இசிஎஸ் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் மூன்று தினங்களுக்குள் வைக்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உள்ளது’ என்றார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜா, நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர் ஓ.ஆர்.நாராயணன், செயலாளர் சுகுமாறன், ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் அப்பாஸ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்