×

சட்டசபைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்

புதுச்சேரி,  அக். 16:  பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், அரசின் சிக்கன  நடவடிக்கையாலும் புதுச்சேரி சட்டசபைக்கு சபாநாயகர் வைத்திலிங்கம்  சைக்கிளில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 நாடு முழுவதும் பெட்ரோல்- டீசல் உயர்வை கண்டித்து பல்வேறு  தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  புதுச்சேரியிலும்  பொட்ரோல்- டீசல் உயர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை  சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டசபைக்கு திடீரென சைக்கிளில் வந்தார். கந்தப்ப முதலியார் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து சட்டசபைக்கு 1 கிமீ  தூரம் சபாநாயகர் அரசு வாகனத்தை பயன்படுத்தாமல் சைக்கிளில் பயணித்து  வந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சட்டசபைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகரை  அங்கிருந்த முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். அப்போது முதல்வரின்  பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை  நாள்தோறும் உயர்வதன் காரணமாக அரசின் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில்  சைக்கிளில் வந்ததாகவும், இது தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும்  தேவைப்படும் நேரத்தில் அதிக தூரம் பயணிக்கும்போது மட்டும் அரசு வாகனத்தை  பயன்படுத்த போவதாகவும், இதேபோல் நகரப்பகுதியில் உள்ள சட்டமன்ற  உறுப்பினர்களும் சிக்கன நடவடிக்கையாக சைக்கிளில் வந்து செல்ல வேண்டும்  என்றார்.
மேலும் அவர் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தில் நியமன  எம்எல்ஏக்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் இறுதி தீர்ப்பு வரும்வரை 3  பேரும் நியமன எம்எல்ஏக்களாக தொடருவார்கள். அவர்களுக்கான ஊதியம்  வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Speaker ,assembly ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...