×

கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நூதன போராட்டம்

புதுச்சேரி,  அக். 16:  ராஜிவ்காந்தி கொலையாளிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழக  கவர்னருக்கு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் அஞ்சல் அட்டை அனுப்பும்  போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
 ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக  சிறையில் இருக்கும் 7 கைதிகளையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு  எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதையடுத்து தமிழக  அமைச்சரவை விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பினர். இதன் மீது கவர்னர் இதுவரை  முடிவெடுக்காமல் உள்ளார்.
 இந்த நிலையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு  சார்பில், தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று தமிழக கவர்னர் உடனடியாக 7  கைதிகளையும் விடுதலை செய்து உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி அஞ்சல் அட்டை  அனுப்பும் இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. தலைமை தபால் நிலையம் முன்பு  நூதன போராட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை  தாங்கினார். வி.சிறுத்தை முதன்மை செயலாளர் தேவபொழிலன், மக்கள் வாழ்வுரிமை  இயக்கம் ஜெகன்நாதன், அரசு ஊழியர் சம்மேளனம் பாலமோகனன், தமிழக வாழ்வுரிமை  கட்சி தர், லோக் ஜனசக்தி புரட்சிவேந்தன், திக சிவ.வீரமணி, பழங்குடி  மக்கள் விடுதலை இயக்கம் ஏகாம்பரம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்  பாராங்குசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் பல்வேறு அமைப்புகளைச்  சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ராஜிவ் கொலையாளிகள் 7  பேரின் விடுதலையை வலியுறுத்தி அஞ்சல் அட்டையை பூர்த்தி செய்து அவற்றை  தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த கட்டமாக அனைத்து  கிராமப்புறங்களிலும் இதேபோல் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்த  முடிவு செய்துள்ளனர்.

Tags : Governor ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...