×

கால்வாய் உடைப்பால் அவலம் சுடுகாட்டில் பாய்ந்தது பெரியாறு பாசன நீர் விவசாயிகள் கடும் அதிருப்தி

சிவகங்கை, அக்.16:  கால்வாய்கள் சரிவர இல்லாததால் தெப்பக்குளத்தில் பெரியாறு நீர் நிரப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன ஒரு போக சாகுபடிக்காக, கடந்த ஆக.20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறக்கப்பட்ட 10 நாட்கள் கழித்து சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் நீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து செப்.14ம் தேதி சிவகங்கை அருகே மலம்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய தினமே மேலூர் பிரிவில் மலம்பட்டியில் இருந்து தமறாக்கி வரை லெஸ்சிஸ் கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட அனைத்து கால்வாய்களிலும் பகுதி பகுதியாக நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெயரளவிலேயே நீர் திறக்கப்பட்டது.

சிவகங்கை தெப்பக்குளத்தில் பெரியாறு நீரை நிரப்ப வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு மற்ற அனைத்து கால்வாய்களையும் அடைத்துவிட்டு தெப்பக்குளத்திற்கு மட்டும் நீர் வரும் வகையில் மேலூர் பிரிவில் நீர் திறக்கப்பட்டது. ஆனால் இடையமேலூர் உள்பட பல்வேறு இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியதால் தெப்பக்குளத்திற்கு நீர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் சரி செய்யப்பட்டு, ஒரு வழியாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் காஞ்சிரங்கால் பகுதிக்கு நீர் வந்தது. திருப்பத்தூர் சாலையில் நீர் வந்த போது கால்வாய் மேடாக இருந்ததால் அருகில் உள்ள சுடுகாட்டுக்குள் பாய்ந்தது.

இப்பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலக பூங்கா மற்றும் ஆர்ச் பகுதியை நீர் கடப்பதில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கால்வாயில் நீர் அதிகமாக வந்தும் தெப்பக்குளம் வந்து சேர்கையில் மிகக்குறைவான அளவே வருகிறது. காஞ்சிரங்கால் வரை அதிகப்படியாக வரும் நீர் அதே அளவில் தெப்பக்குளத்திற்கும் வந்தால் மிக விரைவில் நிறைந்துவிடும். ஆனால் அவ்வாறு இல்லாமல் கால்வாய்களில் குறைவான அளவில் நீர் வருவதால் தெப்பக்குளத்தில் நீர் நிரப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரியாறு பாசன விவசாயிகள் கூறுகையில், ‘‘நீரை வீணாக்காமல் முழுமையாக குளத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட அனைத்து கால்வாய்களிலும் நீர் திறப்பதாக கூறிவிட்டு பெயரளவிற்கு மட்டுமே நீர் திறந்தது போல் இல்லாமல், தெப்பக்குளத்தை முழுமையாக நிரப்பும் வரை திறக்க வேண்டும். தொடர்ந்து விவசாயத்திற்கும் அனைத்து கால்வாய்களிலும் நீர் திறக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : river shore ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்