×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

சாத்தான்குளம், அக். 16: சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி நடந்தது. முன்னதாக நடந்த கருத்தரங்குக்கு ஆழ்வார்திருநகரி வட்டார கல்வி அலுவலர்கள் ராஜம்மாள், மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர். நாசரேத் தொழிலதிபர் அகிலன், டாக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். இதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விளக்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் பயன்பாடை தவிர்க்க வலியுறுத்தி அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி முன்பிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புனர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் மீண்டும் நிறைவடைந்தது.
சவுதியில் இறந்த மகன் உடலை கொண்டு வர நடவடிக்கை
தூத்துக்குடி, அக்.16:  தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாநகரை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜோன் ஆப் ஆர்க். இவர்  தன்னுடன் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த கோரிக்கை மனு:
நான் தூத்துக்குடியிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறேன். எனது கணவர் சங்கர் இறந்துவிட்ட நிலையில் எனது மகனுடன் வசித்து வந்தேன். டிப்ளமோ எலக்ட்ரீசியன் படித்திருந்த எனது மூத்த மகன் ரஞ்சித் ராம்நாத்(28) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதிஅரேபியாவிற்கு சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
 கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி எனது மகன் இறந்துவிட்டதாக தொலைபேசி மூலமாக அவன் வேலைபார்த்து வந்த நிறுவனத்தினர் தகவல் தெரிவித்தனர். எனக்கு ஆறுதலாக இருந்துவந்த மகனும் இறந்துவிட்டான் என்ற செய்தியால் நான் மீளமுடியாத அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளேன். பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்ட என்னால் இதுவரை இறந்த எனது மகனின் உடலை பார்க்கக்கூட முடியவில்லை. எனக்கு உதவி செய்வதற்கு  யாரும் இல்லாத நிலையில் எனது மகன் இறந்து 65நாட்கள் கடந்தும் இதுவரை அவன் உடலை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சவுதிஅரேபியாவில் இருந்து அனுப்பி வைக்கவில்லை.
மகன் இறந்த துக்கத்திலும், அவன் உடலை பார்க்க முடியாத துயரத்திலும் தினம் கண்ணீர் விட்டு வருகிறேன். எனவே இறந்த எனது மகனின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
காற்றாலை நிறுவன விதி மீறலை தடுக்க கோரி
கலெக்டர் அலுவலகத்தில் மதிமுகவினர் மனு
தூத்துக்குடி, அக்.16: காற்றாலை நிறுவனத்தின் விதிமீறல்களை தடுக்ககோரி மதிமுகவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட மதிமுகவினர், மாநில மீனவர் அணிச் செயலார் நக்கீரன், மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து, அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
  ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலைகளை அமைத்து வருகிறது. இந்த நிறுவனம் காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச்செல்ல தனியாருக்கு சொந்தமான நிலங்கள், விவசாய விளைநிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் விதிமுறைகளை மீறி மின்கம்பங்களை நட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், முறைகேடாக நடப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டது. இருந்தபோதும் மீண்டும் அகற்றிய மின்கம்பங்களை அந்த நிறுவனத்தினர் அதே இடத்தில் நட்டுள்ளனர். எனவே விதிமுறைகளை மீறி செயல்பட்டுவரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர்ராஜ், வீரபாண்டி சரவணன், மாநகர செயலாளர் முருகபூபதி, இலக்கிய அணி செயலாளர் மகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு