×

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டி, அக்.16: நாலாட்டின்புதூரில் அதிக மின்அழுத்தம் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், பழுதான மின்கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை அமைக்கவும் வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிராம மக்கள் ஆர்.டி.ஓ.அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விஸ்வநாதநகர், சக்கரத்தாழ்வார்நகர், நம்மாழ்வார்நகர், ஆண்டாள்நகர், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள 300 வீடுகளில் மின்இணைப்பு உள்ளது. மின்அழுத்த குறைபாடு காரணமாக குறைவான மின்சாரம் சப்ளையாவதால், வீடுகளில் உள்ள மின்சாதனை பொருட்கள் பழுது அடைந்து வருகிறது.
 மேலும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான சிமென்ட்டினாலான மின்கம்பங்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிவதோடு, கீழே விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. எனவே, நாலாட்டின்புதூரில் உள்ள இந்த பகுதியில் அதிக மின்அழுத்தம் தரக்கூடிய புதிய டிரான்ஸ்பார்மரை உடனடியாக அமைக்கவும், பழுதான மின்கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்கவும் வலியுறுத்தி காங்கிரஸ்
மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர் தலைமையில் பட்டதாரி பிரிவு தலைவர் அருண்பாண்டியன் முன்னிலையில் கிராம மக்கள் கோவில்பட்டி ஆர்.டி.ஓ.அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ.விஜயாவிடம் வழங்கினர். இக்கோரிக்கைகளை 2 வாரங்களுக்குள் நிறைவேற்றாதபட்சத்தில் காங்கிரஸ், அனைத்து கட்சி சார்பில் நாலாட்டின்புதூர்-கழுகுமலை மெயின்ரோட்டில் பஸ் மறியல் நடத்தப்படும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : office ,Kovilpatti Taluk ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...