×

ஆலங்குளத்தில் மர்ம நபர்களால் கால்வாய் மதகு உடைப்பு

ஆலங்குளம், அக். 16: ஆலங்குளம் கால்வாயில் உள்ள பூலாங்குளம் மதகை மர்மநபர்கள்  உடைத்ததால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதகை சீரமைக்க விவசாயிகள்  வலியுறுத்தியுள்ளனர்.
மழைக் காலங்களில் சிற்றாற்றில் இருந்து வரும் தண்ணீர்  கால்வாய் மூலம் ஆலங்குளம் தொட்டியன்குளத்திற்கு கொண்டு வரப்படும். 1962ல் அமைக்கப்பட்ட இந்த கால்வாயை கடந்த 40 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சீரமைக்காததால்  சமீபத்தில் ஆலங்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வலர்கள் சீரமைத்தனர்.  தொடர்ந்து பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கி கால்வாயில் அடைத்திருந்த மணல்களை அள்ளி சீரமைத்தனர்.  
கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றால சீசனில்  கால்வாயிலிருந்து தண்ணீர்  தொட்டியன்குளத்தை வந்தடைந்தது.  ஆலங்குளம் சுற்று வட்டார பகுதி குளங்கள் நிரம்பியநிலையில்  பூலாங்குளம் அருகே கால்வாயில் உள்ள மதகை  மர்மநபர்கள்  உடைத்துள்ளனர்.
இதனால் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆலங்குளம் கால்வாய் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்வாய் சீரமைப்புக் குழு சார்பில் ஆலங்குளம் காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை, தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கால்வாய் மதகை உடைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதுகுறித்து  சமூக ஆர்வலர் ஜார்ஜ் கூறியதாவது, தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் மர்மநபர்கள் மதகை உடைத்துள்ளனர்.
மதகை சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் மதகை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : breakthrough ,Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி