மதுரை மருத்துவக்கல்லூரி ராகிங் மாணவர்களின் தண்டனை 6 மாதத்தில் இருந்து 45 நாளாக குறைப்பு

மதுரை, அக். 16: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கான தண்டனையை ஆறு மாதத்தில் இருந்து 45 நாட்களாக ராகிங் தடுப்பு கமிட்டி குறைத்து அறிவித்துள்ளது. வரும் 18ம் தேதியுடன் இவர்களது தண்டனை காலம் முடிகிறது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் விடுதிக்குள் சுவர் ஏறி குதித்து, 2ம் ஆண்டு மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராகிங் செய்த 19 மாணவர்கள், கல்லூரியிலிருந்து 6 மாதம், விடுதியிலிருந்து ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் கல்லூரியிலும், விடுதியிலும் நுழைய தடை விதிக்கப்பட்டது. தற்போது மாணவர்களின் தண்டனையை ராகிங் கமிட்டி நேற்று குறைத்து அறிவித்துள்ளது. இதுகுறித்து டீன் மருதுபாண்டியன் நேற்று கூறியதாவது: ராகிங் செய்து தண்டனைக்கு ஆளான மாணவர்களின் பெற்றோர்,

ராகிங்கால் பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர்களின் தண்டனையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ராகிங் தடுப்பு கமிட்டி எனது தலைமையில் கூடியது. துணை முதல்வர் தனலெட்சுமி, முதுநிலை வார்டன்கள், துணை வார்டன்கள், உதவி போலீஸ் கமிஷனர் ராமலிங்கம் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ராகிங் செய்த மாணவர்கள், `இனி ராகிங் செயல்களில் ஈடுபட மாட்டோம். அப்படி நடந்தால் கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்வோம்’ என்ற உறுதிமொழி கடிதங்களை ஏற்றுக்கொண்டும், இவர்களின் படிப்பை மனதில் கொண்டும் தண்டனை குறைக்கப்பட்டது. இதன்படி 19 மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய விதிக்கப்பட்ட 6 மாத தடை, 45 நாட்களாக குறைக்கப்பட்டது. இவர்கள் கல்லூரி செல்வதற்கான தடைகாலம், வரும் 18ம் தேதியுடன் (நாளை மறுதினம்) முடிகிறது. ஆனால் விடுதிக்குள் நுழைய விதிக்கப்பட்ட ஒரு வருட தடை தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: