×

சிவகிரியில் புனித லூர்து அன்னை கெபி அர்ச்சிப்பு விழா

சிவகிரி, அக். 16:  சிவகிரி வட்டாரத்தில் பிரசித்திபெற்றது புனித லூர்து அன்னை தேவாலயம். வேலாயுதபுரம் பங்கில் இணைந்திருந்த இத்தேவாலயம், கடந்த மே மாதம் தனிப்பங்காக உருவாக்கப்பட்டது.
இதையடுத்து தேவாலய வளாகத்தில் புதிதாக லூர்து அன்னையின் கெபியும், அதன் அருகில் இயேசுவின் கல்வாரி மலையம் ஏற்படுத்தப்பட்டு அதன் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஜோசப் கென்னடி, கெபியை திறந்துவைத்து திருப்பலி நிறைவேற்றினார்.
 விழாவில் தேவிபட்டினம், உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அசன விருந்து வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சிவகிரி பங்குத்தந்தை  சேவியர், ஊர் பொறுப்பாளர்கள், வேத போதக சகோதரிகள், சிவகிரி கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
மாணவர் மீது தாக்குதல்
நெல்லை, அக். 16:  தேவர்குளத்தை சேர்ந்த மதுரம் மகன் சூர்யா (16). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீ்ட்டை சேர்ந்த ராமராஜ் மகன் கண்ணன் (19) கிளி வளர்த்தார்.  இந்நிலையில் அந்த கிளி கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிலிருந்து சூர்யா வீட்டிற்குள் பறந்து சென்றது. அதனை பிடித்த சூர்யா வீட்டிற்கு வெளியே விட்ட போது அது வேறு எங்கோ பறந்து சென்று விட்டது.  இதுகுறித்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே சூர்யா அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கண்ணனுக்கும், சூர்யாவிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த சூர்யா  சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேவர்குளம் போலீசார், கண்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : St. Lourdes Ann Kebi Archchi Festival ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி