×

வாகன சோதனை நடத்தி பணம் வசூல் போலி போலீஸ்காரருக்கு வலை

திருவள்ளூர்,  அக்.16:திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூரில், பைக்கில் வந்தவரை நிறுத்தி, வாகன சோதனை நடத்திய ₹3,500 அபராதம் வசூலித்துக்கொண்டு மாயமான போலி போலீஸ்காரரை, உண்மையான போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம்(57). இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில், மேல்நல்லாத்தூர் அருகே செல்லும்போது, சாலையோரம் பைக்கில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், நீலமேகத்தை வழிமறித்து நிறுத்தினார்.  
தொடர்ந்து, அவரிடம் ஹெல்மெட் ஏன் போடவில்லை என கேட்டதோடு, ஆர்.சி., புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் என பைக்கின் ஆவணங்களை கேட்டுள்ளார். பைக்கின் ஆவணங்கள் காண்பித்தும், “ஹெல்மெட் இல்லை’’ என கூறி, பைக்கை பூட்டி சாவியை பிடுங்கிக்கொண்டார். பின்னர், அதற்கான அபராத தொகை என ₹3,500 பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, மணவாளநகர் சந்திப்பில் இன்ஸ்பெக்டர் உள்ளார். அங்கு வந்து சாவியை வாங்கிக்கொள் என கூறிவிட்டு, அவரது பைக்கில் மணவாளநகர் நோக்கி போலீஸ்காரர் சென்றுவிட்டார். இதையடுத்து பைக் சாவி வாங்குவதற்காக நீலமேகம் மணவாளநகர் சந்திப்புக்கு சென்றார். அங்கு போலீஸ்காரர் கூறியதுபோல் இன்ஸ்பெக்டர் இல்லை. மணவாளநகர் காவல்நிலைய போலீசாரிடம் கேட்டதற்கு, சம்பவம் நடந்த பகுதி திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலைய காவல் எல்லைக்கு உட்பட்டது. எனவே, திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் சென்று விசாரியுங்கள் என நீலமேகத்தை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நீலமேகம் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு சென்று, சம்பவம் குறித்து கூறி, பைக்கின் சாவி யாரிடம் உள்ளது என கேட்டுள்ளார். ஆனால் போலீசார், நாங்கள் யாரும் அங்கு வாகன சோதனையில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நீலமேகம், தனது வீட்டில் வைத்திருந்த மற்றொரு சாவியை எடுத்து வந்து பைக்கை ஓட்டிச்சென்றார்.
இதுகுறித்து நீலமேகம் கொடுத்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, வாகன சோதனை நடத்தி ₹3,500 அபராதம் வசூலித்து தப்பிய போலி போலீசை தேடி வருகின்றனர். இச்சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...