×

சாலையில் குளம்போல் தேங்கிய கழிவு நீைர அகற்ற நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல்

 திருத்தணி, அக். 16: திருத்தணி அருகே தெக்கலூர் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றாததைக் கண்டித்து திருத்தணி, பொதட்டூர்பேட்டை சாலையில் தெக்கலூர் கிராம மக்கள் நேற்று காலை திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
 திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெக்கலூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெரு, பெரிய தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் புதிய தெரு, சென்ட்ரல் தெரு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். பிள்ளையார் கோயில் தெரு தவிர, மற்ற தெருக்களில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  அதுமட்டுமின்றி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துள்ளது. இதனால் கழிவு நீர் தடையின்றி செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து, திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள தெக்கலூரில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி தாசில்தார் செங்கலா, வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன், எஸ்ஐக்கள் குமார், சம்பத், வருவாய் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், சம்பந்தப்பட்ட இடங்களில் கால்வாய் கட்டி கழிவு நீர் வெளியேற்றவும், பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Persecute ,road ,waste water road ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...