×

திருவள்ளூரில் டெங்கு, மர்ம காய்ச்சல் பீதி அரசு மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்: சுகாதார பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தல்

திருவள்ளூர், அக். 16: பருவ மழை காலம் துவங்க உள்ள நிலையில், கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.  கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். போதிய படுக்கைகள் இல்லாததால், ஒரே படுக்கையில் இரு குழந்தைகளை படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சிகளில் பொதுசுகாதாரம் பாதுகாக்கப்படுவது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது. பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ள போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் வீட்டில் சேரும் குப்பை தெரு, வாய்க்கால்களில் வீசி எறிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு போன்றவை எந்நேரமும் தொல்லைகளாக உருவாகி உள்ளன.
நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார பணியாளர்கள் இல்லை. நகர் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்குள் கழிவுநீர் அகற்றம் பணி நடக்கிறது. ஆனால் ஊராட்சிகளில் மூன்று மாதம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கழிவு நீர் அகற்றும் பணி நடக்கிறது. கொசு கடிப்பதால் நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் வார்டில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரத்தம், சிறுநீர் உட்பட பல பரிசோதனைகள் செய்யப்படுகிறதே தவிர, என்ன காய்ச்சல் என மருத்துவர்கள் கூற மறுக்கின்றனர்.
தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்தால், முற்றியபிறகு சென்னை அரசு பொது மருத்துவமனை அல்லது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால், என்ன காய்ச்சல் என தெரியாமல் கைக்குழந்தைகளுடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவர்களது பெற்றோர் அலைவது பரிதாபமாக உள்ளது.
நேற்று காலை 9 மணி நிலவரப்படி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சிறுவர்கள், குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பீதியால் மேலும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குறுகிய கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள் சீட்டு பெற, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற, ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள, மாத்திரைகள் வாங்க, ஊசி போட்டுக்கொள்ள என ஆங்காங்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
நேற்று மட்டும் டெங்கு பீதியால், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள குவிந்தனர். அவர்கள் உட்கார இடமின்றி சுவரில் சாய்ந்தபடியும், உடன் வந்தவர்கள் மீது சாய்ந்தபடியும் காத்துக் கிடந்தனர்.
சிறு குழந்தைகளுக்கு முறையாக கையில் பெல்ட் அணிவித்து நரம்பினை தேடி பரிசோதனைக்காக ரத்தம் எடுக்க வேண்டும். ஆனால், பெல்ட் கட்டாமல் ஆங்காங்கே நரம்பை தேடி பலமுறை குழந்தைகளின் கையில் ஊசியை செலுத்தி, காய்ச்சலில் உள்ள குழந்தைகளை மேலும் அங்குள்ள ஊழியர்கள் புண்ணாக்கியது பெற்றோர்களின் கண்களில் கண்ணீரை வரவைத்தது. இதில், பல பெற்றோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மாவட்டத்தில்தான் டெங்கு தலைவிரித்தாடி, 20க்கும் மேற்பட்டோரை கடந்த இரு ஆண்டுகளில் பலி வாங்கியுள்ளது. இந்த கொடுமை இனிவரும் காலங்களில் வராமல் இருக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் சுகாதாரத்தை பேணி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...