×

அரசு நிலத்தை அபகரிக்க அதிமுகவினர் முயற்சி: தடுத்து நிறுத்த கலெக்டரிடம் திமுகவினர் மனு

காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்திற்கு கடந்த தமிழக அரசால் 20 ஆண்டுகள் குத்தகைக்கு 7 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த  7 ஏக்கர் நிலத்தை அதிமுகவினர் அபகரிக்க நினைக்கின்றனர்.  அந்த முயற்சியை தடுத்து நிறுத்தி மீண்டும் அண்ணாவின் வாரிசுகளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர்  தலைமையில்  எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம்  கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அவருடன் திமுக எம்எல்ஏக்கள் வ எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி மற்றும் காஞ்சிபுரம் நகர திமுக செயலாளர் சண்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், குமணன், அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், மாமல்லன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு  கடந்த 1995ம்வருடம் தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நூலகம், மூலிகைப் பண்ணை, முதியோர் இல்லம் நடத்தி வந்தனர்.
அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடில் என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினரான மலர்வண்ணன், சௌமியா, இளவரசி ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.
அரசு குத்தகை நிலத்தை அண்ணாவின் குடும்பத்தினர் பராமரித்து வந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்ததால் அதிமுக நிர்வாகிகள் அந்த இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக திமுக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது.  அதனைத் தொடர்ந்து தலைமை அறிவுறுத்தலின்படி குத்தகை முடிவடைந்ததை காரணம் காட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்தி அந்த நிலத்தின் குத்தகையை மீண்டும் பரிமளம் குடும்பத்தின் வாரிசுகளுக்கு வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...