×

டெங்கு தடுப்பு நடவடிக்கை வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம், அக்.16:  காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு, ஓரிக்கை ஆகிய இடங்களில் டெங்கு கொசு உற்பத்திக்கு ஆதாரமான இடங்களை கண்டறிந்து அழிப்பதற்கான ஆய்வினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் மேற்கொண்டார்.  கலெக்டர் பொன்னையா உடனிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு தனியார் சிமென்ட் ஜாலி ஒர்க்ஸ் நிறுவனத்தில் கொசு உற்பத்திக்கு ஆதாரமான பொருட்கள், தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களை லார்வா கொசுப்புழு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் ஓரிக்கை பேருந்து பணிமனையிலும், டாஸ்மாக் கிடங்குகளிலும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் அங்கு இருந்தவர்களிடம் டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொண்டாலே கொசு உற்கத்தியை தடுக்கமுடியும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 புஞ்சை அரசன்தாங்கல், காலூர், முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் புதிய முறைப்படி நடப்பட்டுள்ள பழமரக்கன்றுகள் தேக்கு மரங்கள் மயில்கொன்றை மரங்கள் சாதாரண முறைப்படி வளர்க்கப்பட்ட மரங்களைக் காட்டிலும் வேகமாக செழிப்பாக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதை பார்வையிட்டார்.
இனி மரக்கன்றுகளை புதிய முறைப்படி நடும்போது கவனமாக பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து மரக்கன்று நடும் நபர்களுக்கு எடுத்துரைத்தார்.
இனிவரும் காலங்களில் இருமுறைகளிலும் நடும் மரக்கன்றுகளின் வளர்ச்சியை ஒப்பிட்டுப்பார்க்கும் வகையிலும் நடப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பலகை வைக்க அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜூ, சுகாதார துணை இயக்குனர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Dengue prevention activity revenue management commissioner ,
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...