×

காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி நல் உணவுக்கான சைக்கிள் பயணம்

காஞ்சிபுரம், அக்.16: மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடும் நோக்கில் இந்திய உணவு தர நிர்ணய ஆணைய வழிகாட்டுதலின்படி, இந்தியர்களுக்கான சரியான உணவுக்கான இயக்கம், மிதிவண்டி ஓட்டமாக உலக உணவு தினமான இன்று (16ம் தேதி) தொடங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 100 தினங்கள் 6500 கி.மீ பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைநகர் புதுதில்லியில் பிரதமரின் முன்னிலையில் நிறைவடைய இருக்கிறது.
உறுதி மிக்க உணவுக்கான பயணம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த சைக்கிள் ஓட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 17, 18 மற்றும் 19 தினங்களில் நடைபெற உள்ளது. நாளை (17ம் தேதி) காஞ்சிபுரம் மாவட்டம், இடைக்கழிநாடு எல்லையில் இருந்து மாமல்லபுரம்  வரையிலும், 19ந் தேதி மாமல்லபுரத்தில் இருந்து கேளம்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் வரையிலும் மிதிவண்டி ஓட்டம் நடைபெற உள்ளது.
18ம் தேதி காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் சரிவிகித உணவுக்கான இயக்கத்தை உணர்த்தும் வகையில் சிறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வில் யோகா மற்றும் கராத்தே போட்டிகள், மரு.சிவராமன் உரை, திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் தலைமையில் பட்டிமன்றம், தலைமை சமையல் கலைஞர் தாமு பாதுகாப்பான உணவு குறித்த நேரடி செயல் விளக்கம் போன்றவை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வில் பல்வேறு துறைகளின், கல்லூரிகளின் அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன. இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்களும், மாணவர்களும் சிறப்பு நிகழ்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bicycle tour ,birthday ,Gandhians ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...