×

செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பஜார் வீதியில் பழுதான உயர்கோபுர மின்விளக்கு 8 ஆண்டாக சீரமைக்காத அவலம்

செய்யூர், அக்.16: செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பஜார் வீதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கும் கடந்த 8 ஆண்டுகளாக பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் வட்டம், லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது திருவாதூர் ஊராட்சி. இங்கு பவுஞ்சூர் பஜார் அமைந்துள்ளது. நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த பஜார் வழியாக தினமும் கூவத்தூர், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமானோர் இங்கு வந்து பஸ் பிடித்து அலுவலகம், பள்ளி, கல்லூரி, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக செல்கின்றனர்.மேலும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் இந்த பஜார் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்களும், சிறு குறு கடைகள், தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த பகுதி எப்போது பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி பஜார் வீதியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட இந்த மின்விளக்குகள் அதன் பின் ஒவ்வென்றாக பழுதாகி  இறுதியில் முழுமையாக செயல்படாமல் போனது.

இதனால் இரவு நேரத்தில் பெண்கள், முதியோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மின்விளக்கு கோபுரத்தை சீர் அமைத்து புதிய விளக்குகள் பொறுத்த பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்தில் தொடர் புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நகரின் பிரதான பகுதியில் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் உள்ள கடைகளில் அடிக்கடி கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி கடைக்காரர்கள் கூறுகையில்; ‘சுமார் 50 கடைகள் மட்டுமே இருந்த பஜார் வீதியில் 10 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட கடைகள் அதிகரித்துவிட்டன. இன்னும் நாளுக்கு நாள் புதிது புதிதாக கடைகள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இருட்டை பயன்படுத்தி சர்வ சாதாரணமாக கடைகளில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் கடையில் கொள்ளை நடந்தது. அதை போலீசார் விசாரித்துவரும் நிலையில் மீண்டும் அதே கடையில் கொள்ளை நடந்தது. ஊராட்சி நிர்வாகம் மாதம் மாதம் வந்து அனைத்து கடைகளிலும் வரி வசூலிக்கின்றனர். ஆனால், அந்த பணத்தில் எங்களுக்கு எந்த வசதிகளும் செய்துதருவதில்லை. ஒரு கழிப்பறை வசதி இல்லை. இதில், பஜார் வீதி அமைந்துள்ள அதே சாலையில் தான் ஒன்றிய அலுவலகமும் அமைந்துள்ளது அவர்களே பிரச்னையை நேரடியாக பார்க்கின்றனர். ஆனாலும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை.  எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தான் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...