சிலை கடத்தல் வழக்கை திசை திருப்ப முயற்சி

திண்டுக்கல், அக். 16: சிலை கடத்தல் வழக்கை திசை திருப்ப முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் சரவணன், மாவட்டத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கொடுத்த மனு விபரம்: ‘‘சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி.பொன்.மாணிக்கவேல் மீது தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். அதில், பொன்.மாணிக்கவேல் ஊடக பரபரப்பிற்காக சிலைகளின் மதிப்பை ரூ.10கோடி, ரூ.20கோடி என்று நிர்ணயம் செய்து வருகிறார். மேலும் 50 சிலைகளை மீட்டார்... 80 சிலைகளை மீட்டார் என்றும் பரபரப்பு கிளப்புகிறார். ராஜராஜசோழன் சிலை அல்ல என்று கைவிடப்பட்ட வழக்கை கையில் எடுக்கிறார்.

அழகுக்காக வைக்கப்பட்டுள்ள சிலைகளை சோதனை என்ற பெயரில் கைப்பற்றி வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறு. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டுதலின்படி பொன்.மாணிக்கவேல் செயல்படுகிறார். வழக்கை திசை திருப்பும் வகையில் வேல்முருகன் பேசி வருகிறார். ராஜராஜசோழன் சிலை உண்மைதானா என்ற சோதனைக்கு கொடுப்பதிற்கு முன்பே இதுபோன்ற குற்றச்சாட்டு சந்தேகம் அளிக்கிறது.

எனவே வேல்முருகனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இவருக்கும் சிலை கடத்தல் குழுவினர்க்கும் தொடர்பு இருப்பது போல இவரது குற்றச்சாட்டு உள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: