வத்தலக்குண்டு திருநகரில் நான்கு நாளாக வடியாத மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பு உடனே அகற்றப்படுமா?

வத்தலக்குண்டு, அக். 16: வத்தலக்குண்டு திருநகரில் கடந்த 4 நாட்களாக மழைநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வத்தலக்குண்டு திருநகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் தேங்குவதற்காக ஊரணி ஒன்று இருந்தது. இதை தனியார் சிலர் ஆக்கிரமித்து விட்டனர். இதனால் மழைநீர் தேங்க வழியின்றி பச்சைப்பட்டி சாலையையொட்டி உள்ள ஓடைக்கு வந்தது.

தற்போது அதன் ஒரு பகுதியையும் சிலர் ஆக்கிரமித்து விட்டதால் மழைநீர் தீயணைப்புநிலையம் பின்புறம் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பட்டி சாலையில் இருந்து திண்டுக்கல் ரோடு தீயணைப்பு நிலையம் ஒட்டி செல்லும் குறுக்கு பாதை அடைபட்டதுடன் விஷஜந்துகளும் வீட்டிற்குள் படையெடுக்கின்றன.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதி சமூகஆர்வலர் ஜெர்மன் ராஜா கூறுகையில், ‘‘தொடர்ந்து மழை பெய்வதால் நாளுக்குநாள் தண்ணீர் அளவு கூடிக்கொண்டே வருகிறது. இரவில் தூங்க முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. விஷஜந்துகளும் வீட்டிற்குள் வருகின்றன. மழைநீர் சகதியில் வழுக்கி விழும் நிலை உள்ளது. நான்கு நாட்களாக இதேநிலை நீடிக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றி நிரந்தர தீர்வாக ஓடை, ஊரணி ஆக்கிரமிப்புகளை அகற்ற சேவுகம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: