×

கிணற்றை தூர்வார முயன்றபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி: திருமண வீட்டில் சோகம்

துரைப்பாக்கம், அக். 16:சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், கணபதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (55), டெய்லர். இவரது மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக, வீட்டை சுத்தம் செய்து, அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இவரது வீட்டில் 30 அடி ஆழம் கொண்ட குறுகிய அளவிலான கிணறு உள்ளது. பல ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ள அந்த கிணற்றில் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. எனவே, அதனை அகற்றி, கிணற்றை சுத்தம் செய்ய லட்சுமணன் முடிவு செய்தார்.


இதற்காக வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் (52), அதே பகுதியை சேர்ந்த குமார் (45) ஆகியோரை நேற்று வீட்டுக்கு வரவழைத்தார்.
இவர்கள் இருவரும் மின் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றினர். பின்னர், அடியில் தங்கிய குப்பையை அகற்ற குமார் கிணற்றினுள் இறங்கினார்.
அப்போது, விஷ வாயு தாக்கியதில் அவர் மயங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், குமாரை மீட்க கிணற்றினுள் இறங்கியபோது, அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார். இதுபற்றி வீட்டின் உரிமையாளர் லட்சுமணன், திருவான்மியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ஆக்சிஜன் சிலிண்டருடன் கிணற்றில் இறங்கியபோது, ஆறுமுகம், குமார் ஆகியோர் இறந்தது தெரிந்தது.
சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து வீட்டு உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. 

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு