குடிநீர் குழாய் உடைப்பு குறித்து வாட்ஸ்அப், வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் குறைதீர் கூட்டத்தில் புகார்

திண்டுக்கல், அக். 16: குடிநீர் குழாய் உடைப்பு குறித்து வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால் நீர் விரயமாகி ரோடும் பெயர்ந்து கிடக்கிறது என்று குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. சிலுவத்தூர் ரோடு ரயில்வே மேம்பாலப்பணி காரணமாக அப்பகுதி போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே இலகுரக வாகனங்கள் மட்டும் திருநகர், மாசிலாமணிபுரம், பாலகிருஷ்ணாபுரம் வழியாக சென்று வருகின்றன. திருநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோடு பெயர்ந்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது எனக்கூறி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘குடிநீர் குழாய் உடைப்பினால் ரோடு அகலமாக பெயர்ந்து பாதாளக்குழி போல உள்ளது. வாகனங்கள் இந்த இட த்தை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். குழாயில் உடைப்பு ஏற்பட்ட போதே இதுகுறித்து மாநகராட்சி வாட்ஸ்அப், வாய்ஸ் மெசேஜ் மூலம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தோம். மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் குடிநீர் விரயம் ஏற்படுவதுடன், புதிய ரோடு பெயர்ந்து மக்களின் வரிப்பணமும் பாழாகியுள்ளது. விரைவில் இவற்றை சரிசெய்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் செயல்படாத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: