கிடப்பிலே கிடக்கும் பச்சையாறு அணை திட்டம் வீணாகும் மழைநீரால் விவசாயிகள் கவலை

பழநி, அக். 16: பச்சையாறு அணைத்திட்டம் கிடப்பிலே கிடப்பதால் மழைநீர் சேமிக்க வழியின்றி வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி பகுதி கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இக்கிராமங்களின் விவசாயம் இருந்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக பழநி பகுதியில் பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி மற்றும் குதிரையாறு என 3 அணைகள் உள்ளன. இதுதவிர பழநி அருகே பொந்துப்புளியில் பச்சையாறு அணை அமைத்தால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன்பெறும் சூழல் உண்டாகுமென இப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பழநி பகுதி மக்களின் 30 ஆண்டுகளுக்கு மேலான கனவுத்திட்டமான பச்சையாறு அணைத்திட்டம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறையினர் திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். பொந்துப்புளியில் அணை அமைக்க வேண்டிய இடம் தேர்வு செய்தபோது நீர்பிடிப்பு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடம் வந்தது. இதன்காரணமாக வனத்துறைக்கு மாற்று இடம் பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்டு, அந்த இடத்தை அணையின் நீர்பிடிப்பு பகுதியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து திட்டத்தின் மறுமதிப்பீட்டு நடந்து வந்தது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுவரை செயல்படுத்த முனைப்பு காட்டவில்லை. இதனால் தற்போது பெய்து வரும் மழையால், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீர் சேமிக்க முடியாமல் வீணாக ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பச்சையாறு அணைத்திட்டம் கனவு திட்டமாகவே போய்விடுமோ என இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மக்கள் பிரச்னைகள் ம்..ஹூம்... ஆட்சியை பாதுகாப்பதிலே அக்கறை

இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் கூறியதாவது, திமுக ஆட்சியில் பூர்வாங்கப்பணி துவங்கப்பட்டது என்ற காரணத்தினால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளது. மறுமதிப்பீட்டுடன் பச்சையாறு அணை திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை பேசியும் எவ்வித பலனுமில்லை. ஆட்சியாளர்கள் ஆட்சியை பாதுகாத்து கொள்வதிலேயே நேரத்தை செலவழித்து வருவதால் மக்கள் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் கண்டுகொள்வதில்லை. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது உறுதியாக பச்சையாறு அணைத்திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: