×

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி துப்புரவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: செங்கல்பட்டு நகராட்சியில் பரபரப்பு

செங்கல்பட்டு, அக்.16: பணியில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, சக ஊழியர்கள் செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  
செங்கல்பட்டு நகராட்சியில் குப்பை அள்ளும் டிராக்டர் டிரைவராக இருப்பவர் மோகன் (40). இவர், நேற்று முன்தினம் மேஸ்திரி ஏழுமலை (50) என்பவருடன் 4வது வார்டுக்கு உட்பட்ட பாசி தெருவுக்கு சென்று, அங்கிருந்த குப்பை தொட்டியை அகற்ற முயன்றார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த அல்தாப், மாலிக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது, ‘‘நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில்தான் இந்த ெதாட்டியை அகற்ற வந்துள்ளோம்,’’ என மோகனும் ஏழுமலையும் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள், ‘‘இந்த தொட்டி புதிதாகத்தான் உள்ளது. இதை ஏன் அகற்றுகிறீர்கள்,’’ என கூறினர். இதுதொடர்பாக, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


ஆத்திரமடைந்த அல்தாப்பும் மாலிக்கும் சேர்ந்து துப்புரவு ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மோகன் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மேஸ்திரி ஏழுமலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுபற்றி இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், துப்புரவு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்ய வலியுறுத்தி, நகராட்சி துப்புரவு ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், துப்புரவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்து ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, நகராட்சி கமிஷனர் மாரிச்செல்வி சம்பவ இடத்துக்கு வந்தார். அவரை முற்றுகையிட்டு, ‘‘ஊழியர்களை தாக்கிய 2 பேரை கைது செய்ய வேண்டும்,’’ என்று கோஷமிட்டனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக மதியம் ஒரு மணி வரை செங்கல்பட்டு பகுதியில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது.

Tags : Cleaners' Struggle for Solidarity Workers ,attackers ,
× RELATED 10 நாட்களுக்கு முன்பும் போலீஸ்...