×

தூர்வாரும் பணிகளை முறையாக செய்யவில்லை பொதுப்பணித்துறை மீது மாநகராட்சி சரமாரி புகார்: ஆய்வு கூட்டத்தில் சலசலப்பு

சென்னை, அக். 16: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை முறையாக மேற்கொள்ளவில்லை என்று ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று  நடைபெற்றது.  இதில், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்), சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைக்காலத்தில் செய்ய வேண்டிய தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக செய்யவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மழைக்காலத்தை  முன்னிட்டு சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிக்கு ₹290 கோடி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துவிட்டன. சென்னையில் உள்ள நீர்நிலைகளில் மாநகராட்சியின் கீழ் 30 கல்வாய்களும், பொதுப்பணித்துறையின் கீழ் 16 கல்வாய்களும் உள்ளன. இவற்றில் மாநகராட்சியின் கீழ் உள்ள கால்வாய்கள் அனைத்திலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஆனால் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கல்வாய்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, ஓட்டேரியில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதை புகைப்பட ஆதாரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.

இதைத் தவிர்த்து நெடுஞ்சாலையில் கீழ் வரும் சாலைகளிலும் முறையான பணிகள் செய்யப்படவில்லை. மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகிறது. அதிலும் எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை. பட்டரவாக்கம் ரயில் நிலையில் அருகில் உள்ள கால்வாய் ரயில்வே கட்டுப்பாட்டில் வருகிறது. அதையும் ரயில்வே தூர்வாரவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக சென்னையில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டன. எனவே இதை சரி செய்ய வேண்டும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம். அவ்வாறு சரி செய்ய முடியாவிடில் தற்காலிகமாக ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Public Works Department ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...