×

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மரத்தை வருவாய் துறையினர் ஏலம் விட கிராம மக்கள் எதிர்ப்பு: விஏஓ அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

குடியாத்தம், அக்.16: குடியாத்தம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மேல் விழுந்த மரத்தை வருவாய் துறையினர் ஏலம் விட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் உள்ளது. கடந்த 9ம் தேதி 300 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கோயில்மீது விழுந்தது. இதில், கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இந்த மரத்தை ஏலம் விடுவதாக தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் நேற்று அறிவித்தார். இதையறிந்த கிராமமக்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மீது விழுந்த மரத்தை வருவாய் துறையினர் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து, தட்டப்பாறை விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மரம், கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. எப்படி ஏலம் விடலாம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் தரணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வந்த தாசில்தார் கோபி, வருவாய் ஆய்வாளர் சத்தியநாராயணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் மரத்தை ஏலம் விட சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மற்றும் கிராமமக்கள் கோயிலில் விழுந்த மரத்தின் மீது ஏறி காவிகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் துறையினர் அங்கிருந்து சென்றனர். இருப்பினும் தட்டப்பாறை கிராமத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் நேற்று 25க்கும் மேற்பட்ட ஆயுதபடை போலீசார் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Hindu Autonomous Authority ,revenue department ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி