×

திருவண்ணாமலையில் வரும் 31ம் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது பிரமாண்ட புத்தக கண்காட்சி

* மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி * கலெக்டர் தலைமையில் ஆலோசனை

திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலையில் வரும் 31ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் பிரமாண்ட புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். திருவண்ணாமலையில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புத்தக கண்காட்சி நடந்தின. எனவே, இந்த ஆண்டும் இதுபோன்ற புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். திறந்த வெளி அரங்கில் அமைப்பது பொருட்செலவு என கருதினால், பள்ளிகள் அல்லது அரங்குகளில் புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்யலாம் எனும் வாசகர்களின் ஏக்கம், தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 8ம் தேதி செய்தியாக வெளியானது.

அதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து இந்த ஆண்டும் பிரமாண்டமான புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், வரும் 31ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 9ம் தேதி வரை புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைய உள்ளன. இந்நிலையில், கண்காட்சி முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லந்தோறும் நூலகம் எனும் இலக்கை அடைந்திட வசதியாக, நடத்தப்படும் புத்தக கண்காட்சி அரங்குகளை அமைப்பது, பதிப்பகங்களை ஒருங்கிணைப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் வந்துசெல்ல வசதியாக, இலவச பஸ் வசதியை ஏற்பாடு செய்வது, கண்காட்சி அரங்கில் குறைந்த விலையில் உணவு, தேநீர், பார்க்கிங் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு, அதிக அளவில் புத்தக வாங்குவோரின் வசதிக்காக, புத்தக கண்காட்சி அரங்கத்திலேயே வங்கிக் கடனுதவி உடனடியாக வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடும், கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார். அதோடு, தினமும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

Tags : book fair ,Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...