×

கண்ணமங்கலம் அருகே தானம் பெற்ற நிலத்தில் கட்டிய அரசு பள்ளிக்கு ஆசிரியர் பூட்டு: மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலால் பரபரப்பு

கண்ணமங்கலம், அக்.16: கண்ணமங்கலம் அடுத்த துளுவபுஷ்பகிரி கிராமத்தில், தானமாக பெறப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணமஙகலம் அடுத்த சந்தவாசல் அருகே துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதிஉதவி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை கட்டுவதற்கு அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் நிலத்தை தானமாக வழங்கினார். அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிந்தசாமியின் தம்பியான ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமாள்(60) நேற்று காலை பள்ளிக்கு வந்து, பூட்டுபோட்டு விட்டு சென்றார். சிறிது நேரத்தில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளிக்கு பூட்டு போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மாணவ, மாணவிகள் மற்றும் தகவலறிந்த பெற்றோர்கள், கிராம மக்கள் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் சாலைக்கொட்டாய் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போளூர் தாசில்தார் தியாகராஜன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், வட்டார கல்வி அலுவலர்கள் கண்ணன், மோகன், ஆர்ஐ அருள்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராஜா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், பெருமாளை தூண்டிவிட்டு பள்ளிக்கு பூட்டுபோட வைத்த ஆசிரியை மணிமேகலையை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூறினர்.

இதற்கிடையில், பள்ளிக்கு பூட்டு போட்ட பெருமாள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அதிகாரிகள், முறைப்படி தானமாக பெறப்பட்ட நிலத்தில் தான் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது என எச்சரித்தனர். தவறை உணர்ந்த பெருமாள் மன்னிப்பு கோரியதோடு, இனி இதுபோன்று செயல்பட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தார். இதையடுத்து சுமார் ஒரு மணிநேரம் கழித்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Teacher ,government land ,land ,parent ,Kannamangalam ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...