தம்மம்பட்டியில் பரபரப்பு இலங்கை அகதி மீது போலீஸ் தாக்குதல்

ஆத்தூர், அக்.12: தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டியில், இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் உள்ள ஜெரின் சுபாஸ்கரன்(40) என்பவர், நேற்று ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, தன்னை தம்மம்பட்டி போலீசார் சரமாரியாக தாக்கியதாக கூறி சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து ஜெரின் சுபாஸ்கரன் கூறியதாவது: நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில், எனது குடும்பத்தாருடன் கடந்த 2006ம் ஆண்டு முதல் தங்கியுள்ளேன். தற்போது சென்னையில் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன். எனது குழந்தைகளுக்கு பள்ளியில் சில சான்றுகள் தர வேண்டியிருந்ததால், சில நாட்களுக்கு முன் நாகியம்பட்டி வந்தேன். அப்போது உறவினர் இருவரை உடன் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தேன். நாகியம்பட்டி முகாமில் உள்ள சிமியோன் என்பவர், இவர்களை ஏன் அழைத்து வந்து உடன் தங்க வைத்துள்ளாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தம்மம்பட்டி போலீசில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் முகாமிற்கு வந்த தம்மம்பட்டி போலீசார்,

என்னிடம் விசாரணை ஏதும் ெசய்யாமல் சரமாரியாக அடித்து உதைத்து, தம்மம்பட்டி காவல் நிலையம் அழைத்து சென்று அடைத்தனர். பின்னர் இனி இதுபோல் நடக்க மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சரமாரியாக தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். போலீசார் எதற்காக என்னை தாக்கினார்கள் என  தெரியவில்லை. இவ்வாறு அவர் ெதரிவித்தார். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் கூறுகையில், ‘நாகியம்பட்டி அகதிகள் முகாமில் சிமியோன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஜெரின்சுபாஸ்கரன் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தோம். சிமியோன் தான் கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எதுவும் வேண்டாம் என கூறியதால், ஜெரின்சுபாஸ்கரனை எச்சரித்து அனுப்பி வைத்தோம்,’ என்றனர். இந்த சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: