×

போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் 6 கோட்ட ரயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

திருச்சி, அக்.12:தெற்கு ரயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தலில் 6 கோட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்சியில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடந்ததால் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக சங்க உறுப்பினர்கள் காத்துக்கிடந்தனர். தெற்கு ரயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தல் திருச்சி மண்டலம் 1, 2, சென்னை, சேலம், மதுரை, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் கடந்த 1 முதல் 10ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 39 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.தேர்தலில் 19 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதில் 2 பெண் வேட்பாளர்கள். எஸ்ஆர்எம்யூ, டிஆர்இயூ, எஸ்ஆர்இஎஸ் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் சார்பில் மொத்தம் 120 பேர் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கோட்டம்  வாரியாக பிரிக்கப்பட்டு தேர்தல் தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. அந்தந்த கோட்டங்களில் வாக்குபெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு அனைத்து கோட்டங்களிலிருந்த 245 வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக திருச்சி வஉசி சாலையில் உள்ள ரயில்வே லோன் சொசைட்டி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு ஆர்பிஎஸ் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரியாக நீதிபதி சிவசுப்ரமணியன், தேர்தல் அலுவலர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் அலுவலர்களை தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கையை தெரிந்து கொள்வதற்காக வேட்பாளர்கள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் வெளியில் போடப்பட்டுள்ள சாமியான பந்தலில் காத்திருந்தனர். அப்போது எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா அங்கு வந்து உள்ளே செல்ல முயன்றார்.

இதற்கு டிஆர்இயூ தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த பரபரப்பான சூழலில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடந்தது. இதில் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக சங்க உறுப்பினர்கள் காத்துக்கிடந்தனர்.

Tags : Tiruchi ,
× RELATED புதுக்கோட்டை அருகே அண்ணாநகர்...