வலங்கைமானில் ஓராண்டாக பழுதாகி கிடக்கும் மழைநீர் அளவீட்டு கட்டமைப்பு

வலங்கைமான், அக்.12: வலங்கைமானில் பழைய தாலுகா அலுவலக கட்டிடம்  அருகே  ஓராண்டிற்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ள மழைநீர் அளவீட்டு கட்டமைப்பு பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் சரி செய்யாமல்  அப்படியே கிடக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வலங்கைமானில் ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இதில் தாலுகா அலுவலகம் 1914ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தாலுகா அலுவலகம் தற்போது  கருவூலம் அருகே புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்து செயல்பட்டு வருகிறது.  பழைய தாலுகா  அலுவலகத்துடன் செயல்பட்டு வந்த வட்ட வழங்கல் அலுவலகம், இ சேவை மையம் உள்ளிட்டவை புதிய அலுவலகத்திற்கு இடம் பெயர்ந்த நிலையில் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த மழைநீர் அளவீட்டு  கட்டமைப்பு மட்டும் பழைய அலுவலகம் அருகேயே இருந்து வருகிறது.

50 ஆண்டுக்கு  முன் மழைநீர் அளவீட்டு  அமைப்பினை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு நுழைவு வாயிலில் கேட் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மழைநீர் துல்லியமாக அளவிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழைநீர் அளவீட்டு கட்டமைப்பை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புகள் இல்லாமல் உள்ளது.   மேலும் மழை நீரை அளவீடும் பிளாஸ்டிக்கால் ஆன குடுவையும் உடைந்து போய் மேல் மூடி இல்லாமல்  உள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக மழை அளவினை துல்லியமாக அளவீட முடியாத  அவவல நிலை உள்ளது. ஆண்டுதோறும் பெய்யக்கூடிய  மழை அளவினை தினந்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு பதிவேட்டில் ஏற்றிய  பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்படுகிறது. மழை நீரை சேமிக்க பல கோடிகளை செலவு செய்யும் பொதுப்பணித்துறை முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மழைநீர் அளவீட்டு  கட்டமைப்பை சரி செய்ய சில ஆயிரங்களை ஒதுக்கீடு செய்வதில்  ஆர்வம் காட்டுவதில்லை.

 எனவே தற்போது செயல்படும் புதிய தாலுகா அலுவலகத்திற்கு அருகில் பொதுப்பணித்துறை புதிதாக மழை நீர் அளவீட்டு  கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். அல்லது பழைய தாலுகா அலுவலகம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மழை நீர் அளவீட்டு கட்டமைப்பினை உடனடியாக சரி செய்ய என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதில் பொதுப்பணித்துறை உரிய அக்கரை காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

× RELATED எனது ஓட்டு எனது உரிமை