முத்துப்பேட்டை அருகே 2 இடங்களில் கள்ளச்சாராய தொழிற்சாலை கண்டுபிடிப்பு

முத்துப்பேட்டை, அக்.12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் 2 இடங்களில் மினி கள்ளச்சாராய தொழிற்சாலை அமைத்து சிலர்  சாராயம் காய்ச்சி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்ஐ கணபதி தலைமையில் போலீசார்  மற்றும் மதுவிலக்கு போலீசார் தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் உள்ள வெட்டிக்காடு என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெற்றிச்செல்வன் மகன் வீரசிங்கம் என்பவரது தென்னந்தோப்பில் மினி  கள்ளச்சாராய தொழிற்சாலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அப்போது  போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் 480 லிட்டர்  ஊரல், 10 லிட்டர் எரி சாராயம், ரூ.1000  ரொக்கம், 8 பேரல்கள் மற்றும் அதற்கான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வீரசிங்கத்தை தேடி வருகின்றனர்.

அதேபோல் அதே பகுதியை சேர்ந்த வீரையா மகன் சிவசுந்தரம் என்பவரின் தென்னந்தோப்பில் கள்ளச்சாராய தொழிற்சாலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது  போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் 240 லிட்டர் ஊரல், 220 லிட்டர் எரி சாராயம், ரூ.300 ரொக்கம் மற்றும் அதற்கான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக  சிவசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

× RELATED கடிச்சம்பாடி மாசிலா மணிஸ்வரர் கோயிலில் அரியவகை சிலை கண்டுபிடிப்பு