×

584 நிவாரண மையங்கள் தயார்: கண்காணிப்பு அலுவலர் தகவல்

தஞ்சை, அக். 12: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளருமான பிரதீப் யாதவ் தலைமை வகித்து பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் கனமழை காலத்தில் பாதிப்புகள் ஏற்பட கூடியதாக கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் 1,278 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் காலங்களில் அரசு துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கக்கூடிய கிராமங்களுக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருவர் வீதம் முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பாதிப்புகளின்போது கால்நடைகளை பாதுகாப்பது, பராமரிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் உள்ளனர். மழை, வெள்ள காலங்களில் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் பாதிக்கக்கூடிய பகுதிகளில் 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 195 நிவாரண மையங்கள், இதர பகுதிகளில் 389 நிவாரண மையங்கள் என மொத்தம் 584 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளநீர் தேங்காதவாறு பாலங்கள், மதகுகளுக்குகீழ் உள்ள புதர்கள் மற்றும் செடிகள் அகற்றப்பட்டு நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு ஏதுவாக பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆறு, கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய ஏதுவாக 106 இடங்களில் 42,327 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகர் பகுதிகளில் உள்ள வெள்ளநீர் வழிந்தோடும் வடிகால்களை 305 கி.மீ. நீளத்துக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கு ஏதுவாக மரம் வெட்டும் இயந்திரங்கள், சவுக்கு கம்புகள், பொக்லைன் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், டீசல் இயந்திரங்கள் போதுமான அளவிற்கு தயார் நிலையில் உள்ளது. அவசர காலங்களில் செய்திகளை பரிமாறி கொள்ள ஏதுவாக வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிடம் விஎச்பி கருவிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் 792 ஏரிகள், 31 குளங்கள் முழு கொள்ளளவையும், 45 நீர்நிலைகள் 70 சதவீதம் கொள்ளளவையும் எட்டியுள்ளது.

வடகிழக்கு பருவமழையின்போது நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களை உள்ளடக்கி மாவட்ட அளவில் ஒரு குழு, கோட்ட அளவில் 3 குழுக்கள், வட்ட அளவில் 9 குழுக்கள், சரக அளவில் 50 குழுக்கள், சமுதாய அடிப்படையிலான பேரிடர் இன்னல் குறைப்பு திட்டத்தின்கீழ் ஒரு கிராமத்திற்கு 5 குழுக்கள் வீதம் கடலோரத்தில் உள்ள 27 கிராமங்களுக்கு 135 குழுக்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ன் மூலம் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கலாம். இம்மையம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார். பின்னர் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் ஊராட்சியில் கல்யாணஓடை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்யும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் ஆய்வு செய்தார். எஸ்பி செந்தில்குமார், டிஆர்ஓ சக்திவேல் உடனிருந்தனர். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ன் மூலம் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கலாம்.

Tags : Relief centers ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...