×

குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் திருப்புறம்பியம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

கும்பகோணம், அக். 12: திருப்புறம்பியம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பதிக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. திருப்புறம்பியம் உத்திரை கிராமத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. ேமலும் அந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்று வந்ததால் குடிநீர் குழாயில் விரிசல் பெரிதாகி சாலை உள்வாங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் வந்து கடமைக்காக சாலை உள்வாங்கிய இடத்தில் மண்ணை கொட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் குழாயின் விரிசல் மேலும் பெரிதாகி சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் அரசு பேருந்து, இன்னம்பூர் கிராமத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் திருப்புறம்பியம், குடிதாங்கி, உத்திரை கிராமத்திலிருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 3 கிலோ மீட்டர் துாரமுள்ள இன்னம்பூர் கிராமம் வரை நடந்து சென்று பேருந்தில் ஏறி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரி செய்து ேபாக்குவரத்தை துவங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் கூறுகையில், திருப்புறம்பியம் சாலையில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் குழாய் உடைந்ததையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குடிநீர் குழாய் உடைந்த இடத்தை பார்வையிட்டு கலெக்டரை தொடர்பு கொண்டு விரைந்து சீரமைக்க வலியுறுத்தினேன். மாணவர்கள், பொதுமக்களை பாதிக்கும் இதுபோன்ற அவலநிலை குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.

Tags : Traffic stop ,Tiruppamiyam road ,
× RELATED திருப்பதி மலைப்பாதை போக்குவரத்து நிறுத்தம்