×

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து குடிநீர் தொட்டியை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருமயம். அக்.12: அரிமளம் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட நீர் தேக்க தொட்டியை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு 1998ம் ஆண்டு அதி திராவிடர் நலத்துறை மூலம் 48 நபர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டன. இதனிடையே இந்த இடத்தை ஓணாங்குடியை சேர்ந்த வெத்தியப்பன் என்பவர் தனது குடும்ப உறுப்பினர் பெயரில் 2001ம் ஆண்டு அதிகாரிகள் துணையோடு நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 2008ம் ஆண்டு வெத்தியப்பன் ஆக்கிரமித்த இடத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீர் வழங்க அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் வெத்தியப்பன் எது இடத்தில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காததால் 2008ம் ஆண்டு வெத்தியப்பன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, பஞ்சாயத்துதலைவர், மின் துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் அதிகாரிகள் ஆஜராகாததால் வெத்தியப்பனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக தெரிகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வெத்தியப்பன் அப்பகுதி மக்களை குடிநீர் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பழுதான மின் மோட்டாரை சரி செய்யவிடாமல் அதிகாரிகளை வெத்தியப்பன் தடுத்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருவதால் கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஓணாங்குடி பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியல் செய்வது என மக்கள் முடிவு செய்து திரண்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சசிகலா, இந்திராதேவி, அரிமளம் படிஓ ரவி, கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் கவுரி, எஸ்.ஐ மேகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு அமைத்த குடிநீர் தொட்டியை தனிநபரிடம் இருந்து மீட்காத வரையில் இதற்கு தீர்வு கிடைக்காது அதிகாரிகள் மீட்காத வரை போராட்டம் தொரும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளை வலியுறுத்தி கலைந்து சென்றனர்.

Tags : Village villagers ,
× RELATED மேலூர் அருகே 3 நாளாக மின்தடை கிராமமக்கள் மறியல்