×

அறந்தாங்கியில் வேட்புமனு தாக்கலுக்காக கூட்டுறவு மருந்தகம் மூடல்

அறந்தாங்கி, அக்.12: அறந்தாங்கியில் வேட்புமனு தாக்கலுக்காக கூட்டுறவு மருந்தகம் மூடப்பட்டதால், நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். அறந்தாங்கி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை எதிரே இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் நிர்வாகக்குழுவை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அமமுகவை சேர்ந்த முன்னாள் சங்கத் தலைவர் சங்கிலிமுத்து கருப்பையா உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கிலிமுத்துகருப்பையா, அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சங்கிலிமுத்துகருப்பையா உள்ளிட்டவர்கள் நேற்று மாலை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் சங்க வளாகத்தில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகம் இயங்கி வருகிறது. விலை குறைவாக மருந்து மாத்திரைகள் கிடைப்பதால், ஏராளமான நோயாளிகள் வாங்கி செல்வர். இந்த நிலையில் நேற்று கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் என்பதால், சூப்பர் மார்க்கெட்டும், மருந்தகமும் பூட்டப்பட்டது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் உயிர்காக்கும் மாத்திரைகளை அவர்கள் நேற்று சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.  இதுகுறித்து மாத்திரை வாங்க வந்த நோயாளிகள் கூறியதாவது: அறந்தாங்கியில் கூட்டுறவு சங்கம் மருந்துக்கடையை திறந்தபிறகு, மாதாந்திர மருந்து மாத்திரைகள் வாங்கும் என் போன்றவர்கள் சுமார் 15 சதவீதம் குறைவான விலையில் மருந்து மாத்திரைகள் கிடைத்ததால், எங்களுக்கு செலவு குறைந்தது.

இதனால் நாங்கள் தொடர்ந்து கூட்டுறவு சங்க மருந்துக்கடைகளில்தான் மருந்து வாங்கி வருகிறோம். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதை காரணம் காட்டி திடீரென மருந்தகமும், சூப்பர் மார்க்கெட்டும் மூடப்பட்டது. இதனால் நாங்கள் மாத்திரை வாங்க முடியாத நிலைக்கு உள்ளானோம். கடை அடைப்பு நடந்தால் கூட மருந்தகங்களை திறக்கலாம் என விதி நடைமுறையில் உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.  கூட்டுறவு சங்கத் தேர்தலை காரணம் காட்டி, கூட்டுறவு சங்க மருந்தகம் மூடப்பட்டதால், நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, தினமும் கூட்டுறவு சங்க மருந்தகத்தை திறக்க வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Closure ,Aranthangi ,
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி