×

மணல் எடுக்கும் தொழில் முடங்கியதால் மாட்டுக்கு தீவனம் வாங்கவே வழியில்லை

குளித்தலை, அக்.12:  குளித்தலை பகுதியில் மணல் எடுக்கும் தொழில் முடங்கியதால் மாட்டுக்கு தீவனம் வாங்கவே வழியில்லை என்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் கோபால் தமிழ்நாடு மணல் குவாரி இயக்க திட்ட இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் நாங்கள் பரம்பரையாக மாட்டு வண்டியில் மணல் எடுத்து வருகிறோம். கடந்த ஓராண்டுக்கு மேல் அரசு மணல் எடுக்க அனுமதி இல்லாமல் சுமார் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். கடந்த ஓராண்டாக பலமுறை கரூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால் அவர் மணலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி தவிர்த்து விட்டார். அதனை தொடர்ந்து ஆற்றுப்பாதுகாப்பு பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்தோம். குளித்தலை உதவி செயற்பொறியாளரை பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்தோம் பதில் கூற மறுத்துவிட்டார். ஓராண்டுக்கு மேல் எந்த தொழிலும் இல்லாமல் மாடுகளுக்கு வேண்டிய தீவன பொருட்கள் கூட வாங்கி போட வழி இல்லாமலும் வறுமையில் உள்ளதால் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. எனவே எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு வழிகாட்டுதலின்படி குளித்தலை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க உத்திரவிட வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாட்டுவண்டி உரிமையாளர்கள் வேதனை


Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது