×

பாலாற்றில் கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு

பொள்ளாச்சி,அக்.12:  பொள்ளாச்சி அருகே பாலாற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த எல்லைப்பகுதி கிராமங்களில் அவ்வப்போது, கேரள பகுதியிலிருந்து சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்படும் இறைச்சிக்கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் வால்பாறை ரோட்டோரம் சமீப காலமாக இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படும் அவலம் தொடர்ந்துள்ளது.   வால்பாறை ரோடு நா.மூ.சுங்கம் வழியாக செல்லும் பாலாற்றில், அண்மையில் பெய்த கன மழையால் தண்ணீர் ஓரளவு செல்கிறது.

ஆனால், ஆற்றில் ஆங்காங்கே இறைச்சிக்கழிவு சிலர் கொட்டிச்செல்கின்றனர். இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கனரக வாகனங்களில் கொண்டுவரப்படும் இறைச்சி கழிவுகளை, அந்த பாலத்தின் மேல் பகுதியிலிருந்து மூட்டை மூட்டையாக ஆற்றில் தூக்கி வீசி செல்கின்றனர். இது தொடர்கதையாக உள்ளதால் விவசாயத்துக்கு செல்லும் தண்ணீரானது துர்நாற்றமடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, தண்ணீரின் சுகாதாரம் கெடாமல் இருக்கவும், சுகாதார சீர்கேட்டை போக்கவும் பாலாற்றில் இறைச்சிக்கழிவு கொட்டுவோரை கண்டறிந்து, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி