×

உடுமலை ரேஷன் கடைகளில் 11 நாட்களாக விநியோகம் இல்லை

உடுமலை, அக். 12: கருவியில் பதிவேற்றம் செய்யாததால், உடுமலை ரேஷன் கடைகளில் பொருட்கள் இருந்தும் 11 நாட்களாக அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உடுமலை தாலுகாவில் 65 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு தினசரி பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் வழங்கப்படுகிறது. ஒரு கடைக்கு 1000 முதல் 1200 வரை ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். உடுமலை பகுதி கிராமப்புறங்கள் நிறைந்துள்ளதால், ஏழை கூலி தொழிலாளர்கள் மாதந்தோறும் தவறாமல் ரேஷன்கடைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் இந்த மாதம் 11 நாட்கள் ஆகியும், நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ரேஷன் கடை, தென்னமரத்து வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, அண்ணா குடியிருப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட ரேஷன்கடைளில் பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை.

பொதுமக்கள் தினசரி வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, மாதந்தோறும் பொருட்கள் வரும்போது, பில்லிங் மெஷினில் இருப்பு விவரம் பதிவேற்றம் செய்யப்படும். கடந்த 31ம்தேதி கடைகளுக்கு பொருட்கள் அனைத்தும் வந்து விட்டன. ஆனால் பதிவேற்றம் செய்யப்படாததால் பொருட்கள் வழங்க முடியவில்லை. நெட்வொர்க் பிரச்சினையான என தெரியவில்லை. அரசு அலுவலகத்தில்தான் இதற்கான ஊழியர்கள் உள்ளனர் என்றனர். இதனால் 11 நாட்கள் ஆகியும் மக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக இருப்பு விவரத்தை பதிவேற்றம் செய்து பொருட்கள் விநியோகிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Udumalai ,ration shops ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...