×

கல்லட்டி மலைப்பாதையில் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு 2 மாதம் தொடரும்

ஊட்டி, அக். 12: கல்லட்டி மலைப்பாதையில் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு இன்னும் 2 மாதத்திற்கு தொடரும் என எஸ்பி சண்முகப்பிரியா தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் முதுமலை புலிகள் காப்பகம், மைசூர் செல்ல கல்லட்டி, மசினகுடி மலைப்பாதையை பயன்படுத்துகின்றனர். செங்குத்தான மலைச்சரிவில் அமைக்கப்பட்டுள்ள இச்சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இச்சாலையில் நடக்கும் விபத்துக்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநில, வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளே. இந்நிலையில், கடந்த 1ம் தேதி நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து நடந்த இரு நாட்களுக்கு பின்னரே கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து. இச்சாலையில், விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு வெளியூர் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்கள் செல்லவும் காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   பகல் நேரங்களில் தலைகுந்தாவில் இருந்து மசினகுடி பகுதிக்கு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதேபோல், இரவு 9 மணிக்கு மேல் நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. முதுமலை மற்றும் மைசூர் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தற்போது முதுமலை, தெப்பக்காடு, கூடலூர் வழியாக ஊட்டி வந்துச் செல்கின்றனர். தற்போது உள்ளூர் வாகனங்களும் இரவு நேரங்களில் இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் மசினகுடி பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் இவ்வழித்தடத்தில் வழக்கம் போல் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சார்பில் நேற்று நீலகிரி எஸ்பி., மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட நீலகிரி எஸ்பி., சண்முகப்பிரியா, மசினகுடி பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, இச்சாலையில் நீலகிரி வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளூர் வாகனங்களும் இரவு 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால், அவசர தேவைகள் மற்றும் வெளியூர்களில் இருந்து மாணவர்கள் வந்தால், அவர்களை மசினகுடிக்கு பெற்றோர்கள் அழைத்து செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்த உத்தரவு இரு மாதங்களுக்கு தொடரும். ஆய்விற்கு பின், இச்சாலையில் நிரந்தரமாக விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,

மசினகுடி பகுதி வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் காவல்துறை மூலம் வழங்கப்படும்.  விபத்துக்களை தவிர்க்கவும், வாகனங்களை சோதிக்கவும் நவீன கருவிகள் பொருத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்ட பின், சுற்றுலா பயணிகள் வாகனங்களும் செல்லவும் அனுமதிக்கப்படும். ஆனால், இரு மாதங்களுக்கு இச்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் தொடரும். ஆனால், உள்ளூர் வாகனங்கள் உரிய அனுமதியுடன் ெசல்ல அனுமதிக்கப்படும், என்றார்.

Tags : Kallatti ,
× RELATED விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி...