×

தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை

கோவை, அக்.12: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ‘சோமனூர் ரகம்’ உற்பத்தி செய்யும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒப்பந்த கூலி வழங்காததால், நஷ்டத்தில் இயங்கி வரும் விசைத்தறியாளர்கள் இந்த ஆண்டு தங்களிடம் பணியாற்றும் 1.25 லட்சம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் பழனிசாமி, செயலாளர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2 லட்சம் விசைத்தறிகளில் 1.25 லட்சம் விசைத்தறிகளில் ‘சோமனூர் ரகம்’ எனப்படும் துணி நெய்யப்படுகிறது. இரு மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘சோமனூர் ரகம்’ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு பாவுநூல் வழங்கி அதை துணியாக நெய்யச்செய்து அதற்கு மீட்டர் கணக்கிட்டு கூலி வழங்கி வருகின்றனர்.
 
இருதரப்பினரிடையே கூலி ஒப்பந்தம் 3 ஆண்டுக்கு ஒரு முறை கலெக்டர், அமைச்சர் முன்னிலையில் போடப்படுகிறது.அதன்படி கடந்த 2014ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை, கடந்த 4 ஆண்டாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தவில்லை. 6 ஆண்டுக்கு முந்தைய கூலியே வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 4 ஆண்டில் விசைத்தறியாளர்கள் உதிரிபாகங்கள் விலை உயர்வு, விசைத்தறி தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, நிர்வாக செலவு அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிக்க முடியவில்லை. கடந்த 3 ஆண்டில் 15 ஆயிரம் விசைத்தறிகள் விற்கப்பட்டு, விசைத்தறியாளர்கள் இத்தொழிலை கைவிட்டுள்ளனர். இது போதாதென்று தற்பொழுது ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் 6 வார கூலியை வழங்காமல் பிடித்தம் செய்துள்ளனர். பிடித்தம் செய்ய ஒப்புக்கொள்பவர்களுக்கு மட்டுமே நெசவிற்கு தேவையான பாவுநூல் வழங்குகின்றனர்.

இதனால், வேறு வழியின்றி விசைத்தறிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் விசைத்தறியாளர்கள், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  இந்நிலையில், வரும் தீபாவளியை முன்னிட்டு தங்களிடம் பணியாற்றும் 1.25 லட்சம்  தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்கள் 2014ம் ஆண்டு ஒப்பந்தப்படி கூலி வழங்கவும், 4 ஆண்டாக வழங்காத நிலுவை கூலி உயர்வை வழங்கவும், ஒவ்வொரு விசைத்தறியாளரிடம் பிடித்தம் செய்த ரூ.1.50 லட்சம் வரையிலான கூலியை பெற்றுத்தரவும், மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, வரும் தீபாவளிக்குள் ஒப்பந்த கூலியும், பிடித்தம் செய்த தொகையும் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்