கரும்பு வரத்து அதிகரித்தும் வெல்லம் விலை சரிந்தது

ஈரோடு, அக். 12: கரும்பு வரத்து அதிகரிப்பால், குண்டு வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. வெல்லம் தயாரிப்பதற்காக சத்தி, கோபி, பவானி, கவுந்தப்பாடி, அந்தியூர் மற்றும்  சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் ஆலைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆலைகளில் கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் பாவு உற்பத்தி செய்து, நாட்டு சர்க்கரையாகவும், உருண்டை வெல்லமாகவும் தயாரிக்கின்றனர். உருண்டை வெல்லத்தினை 30 கிலோ மூட்டையாக எடை வைத்து, வெல்ல சந்தைக்கு அனுப்புகின்றனர். அங்கு ஏலம் மூலமாக வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.  மேலும் பெரும்பாலான வியாபாரிகள் நேரடியாக ஆலைகளுக்கு வந்து வெல்லத்தை வாங்கிச் செல்கின்றனர். ஈரோட்டில் தயாரிக்கப்படும் வெல்லமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி காரணமாக கரும்பு வரத்து குறைந்தது. இதனால் வெல்லத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.  தற்போது கரும்பு விளைச்சல் அதிகம் இருப்பதால் வெல்லம் தயாரிப்பினை உற்பத்தியாளர்கள் அதிகப்படுத்தியுள்ளனர். இதன்காரணமாக கடந்த ஆண்டை விட வெல்லம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. உருண்டை வெல்லம்  மூட்டை(30கிலோ) ரூ.1,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெல்லத்தின் விலை குறைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு முள்ளாம்பரப்பு வெல்லம் உற்பத்தியாளர் லோகநாதன் கூறுகையில், கரும்பில் இருந்து சாறு எடுத்து கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் வெல்லம் உற்பத்தி செய்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் 30 கிலோ மூட்டையாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் நாங்களும் 3 மாதமாக வெல்லம் உற்பத்தி செய்யாமல், ஆலையை மூடினோம்.

தற்போது நல்ல மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் வெல்ல உற்பத்தியும் அதிகப்படுத்தியுள்ளோம். இதனால் கடந்த ஆண்டு 30 கிலோ உருண்டை வெல்லம் மூட்டை ரூ.1,200க்கு விற்பனையானது, தற்போது ரூ.1,050க்கு விற்பனை செய்கிறோம்.2ம் தர வெல்லம் ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு வகைகள் தயாரிப்பிற்கு வெல்லத்தின் தேவை அதிகளவில் உள்ளது. வெல்லத்தின் விலை உயராததால் கவலையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: