ஈரோடு கருங்கல்பாளையத்தில் மழையால் மாடுகள் வரத்து குறைவு சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

ஈரோடு, அக். 12: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம் தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள், எருமைமாடுகள், வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சந்தையான இந்த மாட்டுச்சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் வந்து செல்கிறார்கள். மாடுகளை வாங்கி செல்வதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இதனால் விற்பனையும் சரிந்தது. நேற்று நடந்த சந்தையில் 450 பசுமாடுகளும், 300 எருமை மாடுகளும், 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் பசுமாடு 16 ஆயிரம் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமைமாடுகள் 18 ஆயிரம் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 2 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகியுள்ளது. வழக்கமாக 3 கோடி ரூபாயில் இருந்து 3.50 கோடி ரூபாய் வரை விற்பனை இருக்கும். ஆனால் தொடர் மழையினால் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனையும், வரத்தும் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: