×

காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் நாய்கள் கூட்டமாக திரிவதால் தெறித்து ஓடும் பயணிகள்

காரியாபட்டி, அக்.12:  காரியாபட்டி நகர் பகுதியில் ஏராளமாக தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இவை கடிப்பதால் மக்கள் வீதிகளில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். குழந்தைகளை வெளியே விட பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். தெரு நாய்கள் சாலைகளின் நடுவிலும், குறுக்கேயும் வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். நான்கு சக்கர வாகனங்களின் குறுக்கே செல்லும் நாய்கள் அடிபட்டு இறக்கின்றன. இவற்றை அப்படியே அகற்றாமல் விட்டுவிடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, பஸ் நிலையத்தில் இருந்து முக்கு ரோடு வரை குறைந்தபட்சம் 100 நாய்களாவது இருக்கும். பஸ் ஸ்டாண்டில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் நிற்க முடியவில்லை. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.  

மக்கள் கூறுகையில், ‘‘காரியாபட்டி பகுதியில் கறிக்கடைகள் நிறைய உள்ளன. மாலையில் இயங்கும் ஆட்டுக்கால் சூப்புகள் கடைகளும் அதிகம் உள்ளன. இங்கிருந்து கழிவுகளை ரோட்டில் போட்டு விடுகின்றனர். இதை நாய்கள் சண்டை போட்டு சாப்பிடுகின்றன. அப்போது யாராவது ரோட்டில் வந்தால் அவர்கள் மீது பாய்ந்துவிடுகின்றன. இதனால் பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இரு சக்கர வாகனத்தில்கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை. விரட்டி வந்து கடக்கின்றன. காரியாபட்டியில் புதிதாக திடீரென நாய்கள் அதிகம் வருகிறது. அருகில் உள்ள அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் பிடிக்கப்படும் நாய்களை இங்கு கொண்டுவந்து விட்டு விடுவதாக கூறப்படுகிறது. சில தினங்களாக பத்துக்கும் மேற்பட்டோர் நாயினால் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Passengers ,crowd ,Kariapatti ,bus stand ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!