×

சிவகாசியில் மெழுகு பூசிய ஆப்பிள் விற்பனை ஜோர் உணவுத்துறை அதிகாரிகள் உறக்கம்

சிவகாசி, அக்.12: சிவகாசியில் மெழுகு பூசிய ஆப்பிள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தொழில்நகரான நகரான சிவகாசியில் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் சரிவர எடுப்பதில்லை. அதனால் பாதுகாப்பற்ற உணவு வகைகள், பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. தற்போது நகரில் பழக்கடைகளில் எளிதில் அழுகாமல் இருக்க மெழுகு பூசிய ஆப்பிள் பழம் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இதனை அறியாமல் பொதுமக்கள் பெரும் அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனை சாப்பிடுவதால், வயிறு உபாதை உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘நீண்டநாட்கள் கெடாமல் இருப்பதற்காக மெழுகு தடவிய ஆப்பிள்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வகை ஆப்பிள்கள் பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக, வாங்கத் தூண்டும் வகையில் இந்த மெழுகு பூசப்பட்டுள்ளது. அதிலுள்ள மெழுகை சுரண்டிய பின் பழத்தை நறுக்கினால் உள்ளே கறுப்பாக மாறிவிடும். விரைவில் அழுகி விடும். ஆப்பிள் பழத்தை தோலை சீவாமல் அப்படியே சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் தோலை சீவாமல் மெழுகுடன் சாப்பிட்டால் வயிற்றில் மெழுகு படிந்து செரிமான பிரச்னை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் பாதிக்கலாம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. எல்லா ஆப்பிள்களிலும் மெழுகு தடவப்படுவதில்லை. சில வகை ஆப்பிள்கள் மட்டும் மெழுகு தடவி விற்பனைக்கு வருகின்றது. உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் இயற்கையான ஆப்பிள்களை சாப்பிட முடியும்’’ என்று தெரிவித்தார்.

Tags : food dealers ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து