×

வீடுகளில் பதுக்கி வைத்து பட்டாசு விற்கக்கூடாது தீயணைப்பு துறை எச்சரிக்கை

காரைக்குடி, அக். 12:  அனுமதி பெறாமல் வீடுகள் மற்றும் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்து பட்டாசு விற்பனை செய்தால் காவல்துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காரைக்குடி பகுதியில் தீபாவளி வியாபாரம் துவங்கியுள்ளது. சாக்கோட்டை, கல்லல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்துள்ளனர். தீபாவளி வியாபாரத்தில் முக்கிய இடம்பிடிக்கும் பட்டாசு கடைகள் நகரின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக கடைகள் அமைக்க தீயணைப்பு துறையினரிடம் பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு கடை நடத்த தீயணைப்பு துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்புதுறை அலுவலர்கள் சிலர் கூறுகையில்,`` பட்டாசு விற்பனை செய்ய வருவாய்துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு பட்டாசு கடைகளுக்கும் இடையேயும் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.  குடியிருப்பு, அலுவலகம் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் பட்டாசு கடை இருக்கக்கூடாது. தனி கட்டிடமாக இருக்க வேண்டும். உறுதியான கூரை அமைக்கப்பட வேண்டும். பட்டாசுகளை தவிர வேறு எந்த பொருளையும் விற்பனை செய்யக்கூடாது. காட்சிக்காக கடைகளுக்கு வெளியே பரப்பி வைப்பது, அபாயகரமாக தொங்கவிடுவது குற்றமாகும். அதிகம் வெப்பம் தரும் மின் விளக்குகள், அலங்கார விளக்குள் அமைக்கக் கூடாது. மின்தடை ஏற்படும்போது தீ விபத்தை ஏற்படுத்தும் விதமாக மெழுவர்த்தியோ அல்லது ஒளி விளக்குகளையோ ஏற்றிவைக்கக் கூடாது.

அதிக பட்சம் 25 கிலோ எடையுள்ள பட்டாசுகளை மட்டுமே ஸ்டாக் வைக்க வேண்டும். சுவற்றில் எரிந்தால் வெடிக்கக்கூடிய அதிக சத்தம் வரக்கூடிய வெடி விற்பனை செய்யக்கூடாது.  அனுமதி பெறமால் பட்டாசு கடை நடத்தினாலோ, வீடுகள் மற்றும் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளுக்கு மீறி கடை நடத்தப்பட்டால் கடை உரிமை ரத்து செய்வதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு கடைகளும் முறைப்படி நடத்தப்படுகிறதா என தீயணைப்பு துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் திடீர்என ஆய்வு மேற்கொள்வார்கள்’’ என்றனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...