×

கண்மாய், வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு துவக்கம் முதல் கட்டமாக 16 வீடுகள் இடிக்க உத்தரவு

மதுரை, அக். 12: மதுரையில் கண்மாய், வரத்துக்கால்வாய்களின் ஆக்கிரமிப்பால், சமீபத்தில் பெய்த மழைக்கு குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து, அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வண்டியூர் கண்மாய் கால்வாயில் 16 வீடுகள் இடிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்மாய்கள் வறண்டது. அனைத்து கண்மாய்களையும், வரத்துக்கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் ரூ.பல கோடியில் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் இத்திட்டத்தில் இந்தாண்டு, 128 கண்மாய்களில் தூர்வாரி வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்பட்டது. 99 கண்மாய்களில் இப்பணி முடிந்ததாகவும், மீதியுள்ள 23 கண்மாய்களில் பணி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதுரை வண்டியூர், செல்லூர் கண்மாய்களில் இப்பணி முறையாக நடைபெறவில்லை. போதிய அளவு தூர்வாரவில்லை. 24 அடி ஆழம் உள்ள வண்டியூர் கண்மாய் தற்போது 3 அடி மட்டுமே ஆழம் உள்ளது. இதனால் கண்மாய்க்கு வந்த தண்ணீர் முழுவதும் வீணாக மறுகால் பாய்ந்து வைகை ஆற்றிற்கு சென்றது. மதுரை நகர் பகுதியிலுள்ள 13 கழிவுநீர் கால்வாய்களை தூர்வார ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். ஆனால் எங்கும் முறையான பணி நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாவட்டத்தில் 853 மி.மீ மழையும், அடுத்தநாள் 597 மி.மீ மழையும் பெய்தது. இந்த இரண்டு மழையைகூட தாங்க வழியின்றி மதுரையின் வடபகுதியில் உள்ள நகரமும் அதன்அருகே உள்ள பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்தன.  தூர்வாரியதாக சொல்லப்பட்ட கண்மாய், கால்வாய்கள் உடைந்து குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மிதந்தன. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தூர்வார ஒதுக்கிய நிதி என்னாச்சு? என்று கேட்டால், அதிகாரிகள் கைவிரிக்கிறார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட வந்த கலெக்டரை பொது மக்கள் முற்றுகையிட்டதால், அமைச்சர்களும் பல பகுதிகளை பார்வையிடுவதை தவிர்த்தனர். இந்நிலையில், நேற்று கலெக்டர் நடராஜன், நிலஅளவை துறையினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை திடீரென்று ஆய்வு செய்தார். வரத்துகால்வாய்களை அளந்து, அத்துமால் கல் உண்ட வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை குறீயிடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பாளருக்கு உடனே தகவல் தெரிவித்து, அவர்களுக்கு மாற்று இடமாக ராஜாக்கூரில் வீட்டுவசதி வாரியத்தில் இடம் கொடுப்பதாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்காவிட்டால், உச்சநீதிமன்றம், ஐகோர்ட் வழிகட்டுதல் படி ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சர்வேயர்கள் வண்டியூர் கண்மாய் கால்வாயில் நேற்று அளவீடு செய்தனர். இதில் 16 வீடுகள் கால்வாய் ஆக்கிரமிப்பில் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை குறியீடு செய்து, அகற்றுவது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விைரவில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட உள்ளன.

Tags : canals ,phase ,houses ,
× RELATED வேட்பாளர்களுக்கான 3ம் கட்ட ஒத்திசைவு கூட்டம்